Tuesday, January 10, 2012

Index

                               English

                     


                    

                        



ஹைட்ரஜனில் ஓடும் ஆட்டோ அறிமுகம்




புது தில்லி, ஜன.9: உலகிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ஆட்டோக்கள் தில்லி கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹைஆல்ஃபா என்ற பெயரிலான இந்த ஆட்டோக்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன
.
 ஹைட்ரஜனில் இயங்கும் இத்தகைய ஆட்டோக்கள் செயல் விளக்கமாக பிரகதி மைதானத்தில் வலம் வந்தன. இதற்காக ஹைட்ரஜன் நிரப்பு நிலையமும் கண்காட்சி அரங்கில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐடிபிஓ) இந்த ஆட்டோக்களை சோதனை ரீதியில் மைதானத்தில் பயன்படுத்தி வருகிறது
.
 ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (யுனிடோ) மற்றும் சர்வதேச ஹைட்ரஜன் சக்ஜி தொழில்நுட்ப மையம் (ஐசிஹெச்இடி), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் தில்லி ஐஐடி ஆகியன கூட்டாக இந்த ஆட்டோவை தயாரித்துள்ளன. இதற்கு மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சகம் ஒத்துழைப்பு அளித்துள்ளது.கரியமில வாயுவை வெளியேற்றாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் முதல் கட்டமாக இத்தகைய ஆட்டோக்கள் உருவாக்கப்பட்டதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார்.
 வர்த்தக ரீதியில் இத்தகைய வாகனங்கள் இன்னமும் உற்பத்தி செய்யப்படவில்லை. சோதனை ஓட்டத்தின்போது ஏற்படும் குறைகள் சரி செய்யப்படும். மேலும் ஒரு கிலோ ஹைட்ரஜன் விலை ரூ. 250 ஆக உள்ள நிலையில் இது கட்டுபடியாகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஹைட்ரஜன் விலை குறைந்தால் இத்தகைய ஆட்டோக்களை தயாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற அவர், ஏற்கெனவே சிஎன்ஜி-யில் இயங்கும் ஆட்டோக்களை விட இதன் விலை ரூ. 20 ஆயிரம் கூடுதலாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். சிஎன்ஜி ஆட்டோக்களின் விலை ரூ. 2 லட்சமாகும். 20 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு இப்போது ஹைட்ரஜனில் இயங்கும் ஆட்டோ சாத்தியமாகியுள்ளதாக ஐஐடி தில்லி பேராசிரியர் எல்.எம். தாஸ் தெரிவித்தார்.

Thursday, January 5, 2012

முல்லை பெரியாறு


  ங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது வறட்சியின் காரணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி கடுமையான பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஆண்டுதோறும் வரும் தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு, மலையிலேயே பெய்துவிடுகின்றது. மலையின் மறைவு பிரதேசமான தமிழகத்தில் மழை பெய்வதில்லை. வெறும் காற்றுதான் வருகிறது. அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நதியாக உருவாகி, அரபிக் கடலில் கலந்துவிடுகிறது. மேற்கு நோக்கி பாய்ந்து, நீரை கடலில் கலந்து வீணாகும் பெரியாறு நதியை அணையிட்டு தடுத்து நிலத்தடி குழாய்கள் வழியாக கிழக்கு நோக்கி பாய வைக்க திட்டமிடப்பட்டது. இப்படி கடலில் கலக்கும் பெரியாறு நதியை கிழக்கு முகமாக திருப்பி, வைகையுடன் இணைக்கும் எண்ணம் முதன்முதலில்  அப்போதைய மதுரை கலெக்டருக்குத்தான் உதித்தது. வீணாக கடலில் சேரும் பெரியாறு நதியை வைகையுடன் இணைத்தால், வறட்சியான மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன வசதியை மேம்படுத்தலாம் என்ற செய்தியை அன்றைய சென்னை மாகாணத்திற்கு தெரியப்படுத்தினார்.

  பெரியாறுத் திட்டத்திற்கான துவக்கம் உருவானது. அப்போதைய முதன்மை பொறியாளராக இருந்த கேப்டன் ஜே.எல்.கால்டுவேலிடம் இத்திட்டத்தைப் பற்றி கேட்கப்பட்டது. பெரியாறுத் திட்டத்தை பற்றி ஆராய்ந்த கால்டுவேல், "இதற்கு 100 அடி ஆழம் கொண்ட சுரங்கம் அமைக்க வேண்டும் எனவும், இத்திட்டம் ஆதாரமற்று உள்ளதாகவும்' தெரிவித்தார்.

  பின்பு 1867-இல் பொறியாளர் மேஜர் ஆர்.பி. ரைவ்ஸ் பெரியாறு அணைத் திட்டம் பற்றிய அறிக்கையை ஆங்கில நிர்வாகத்திடம் சமர்பித்தார். இதையடுத்து அணை கட்ட ஆகும் செலவு மற்றும் சுகாதாரமற்ற சூழல் பற்றி கூறினார். அடுத்து 1872-இல் ஆர்.இ.ஸ்மித் இத்திட்டத்திற் கான அறிக்கையை சமர்பித்தார். அதிலும் திருப்தி ஏற்படாமல் 1876-ஆம் ஆண்டு ஸ்மித் மற்றும் கேப்டன் பென்னிகுயிக் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை   அளித்தனர். அப்போது தான் முதன் முதலாக மண்ணால் பிணைக்கப்பட்ட அணை கட்டுமானத்திற்கான முறையான திட்டமும், செலவு மதிப்பீடும் கொண்ட அறிக்கை தயாரானது. இருந்தபோதிலும் 1882 வரை கட்டுமானம் துவக்கப்படவில்லை. அதற்கு காரணம் திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் திருநாள் ராமவர்மா.

திருவிதாங்கூர் என்பது தற்போதைய கேரள மாநிலத்தில் தென் பகுதிகளையும், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம். திருவனந்தபுரம் இதன் தலைநகரம். ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் ஆங்கிலேயரின் விசுவாசிகள். தமிழ் மக்களுக்கு பல துன்பங்களை கொடுத்து,  தமிழினத்தின் பொருளாதாரத்தை சுரண்டியவர்கள். இதற்கு பத்மநாபசாமி கோயில் பொக்கிஷங்களே சாட்சி. இவர்களது ஆட்சி முழுவதும் மனுஸ்மிருதி கொள்கையை அடிப்படையாக கொண்டும், பார்ப்பனியர்களின் அமைச்சரவையோடும் நடைபெற்றது.

இவர்களது ஆட்சி காலத்தில் சாதியக் கொடுமைகள் ஏராளம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், தோள்சீலைப் போராட்டம். தமிழினத்தின் 18 சாதியை சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக் கூடாதன சட்டம் இருந்தது. இந்த கொடுமையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து தமிழின மக்களும் அன்றைய கிருத்துவ பாதிரியார்களும் போராடினர். அதன்பிறகே பெண்கள் மேலாடை அணிய  அனுமதிக்கப்பட்டனர். இந்த வரலாற்று கொடுமைகளைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதியுள்ள நூல்கள் மற்றும் அவர்கள் எடுத்த புகைப்படங்களே ஆதாரம். நாகரீகம் கருதி அப்புகைப் படங்களை வெளியிட இயலவில்லை. 

இப்படி தமிழின விரோதியான திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆங்கிலேயரின் பெரியாறு அணைத் திட்டத்தை அவர்களது ஆட்சி பகுதியில் உருவாவதை அனுமதிக்கவில்லை. ஆங்கில அதிகாரிகள் பெரியாறுத் திட்டத்தினை பற்றிய பல ஆலோசனைக் கூட்டம் நடத்தியும் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரும் அவர்களது அமைச்சர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

பின்னர்தான் ஆங்கிலேயர் தனது மிரட்டல் பாணியை கையிலெடுத்தனர். இதற்காக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளலாம் எனவும் அதன் மூலம் ஆங்கில அரசு ஆண்டு தோறும் கப்பம் கட்டும் எனவும் கூறப்பட்டது. மீறினால் சென்னை மாகாண அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்குமென கூறப்பட்டது. அதனால் ஆங்கிலேயருடன் பகைத்து கொள்ள விரும்பாத திருவிதாங்கூர் மகாராஜா அணைத் திட்டத்திற்கு சம்மதித்தார்.


முல்லைப் பெரியாறு நதிநீர் ஒப்பந்தம் 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் திருநாள் ராமவர்மாவுக்கும் மெட்ராஸ் மாகாண பிரிட்டிஷ் செயலாளருக்குமிடையே கையெழுத் தானது. பெரியாறு நீரை வறண்ட தென் தமிழக பகுதிகளுக்கு உபயோகப்படுத்த ஏற்பட்ட இவ்வொப்பந்தம் 999 வருட ஒப்பந்தமாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானான வி.ராம அய்யங்காரும் மெட்ராஸ் மாகாண அப்போதைய செயலாளர் ஜே.சி. ஹானிங்டனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

ஒப்பந்தத்தின் மூலம் புதிய அணையை கட்டி பெரியாறு நீரை தேக்கி வைக்கவும், அணையிலிருந்து பாசன வசதிக் காக கொண்டுச் செல்லவும் முழு அதிகாரம் மற்றும் உரிமம் மெட்ராஸ் மாகாண செயலருக்கு வந்தடைந்தது. மேலும் இந்த ஒப்பந்தம் நீரை தேக்குவதற்கு 8000 ஏக்கர் நிலத்தையும் அணை கட்டிக் கொள்ள 100 ஏக்கர் நிலத்தை யும்; வழிவகை செய்தது. இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய்  வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் வரும் அனைத்து நீர்நிலைகளுக்குமாக ரூ.40,000 வாடகையாக கொடுப்பது என நிர்ணயிக்கப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் பென்னிகுயிக் மீண்டும் தனது அறிக்கை மற்றும் மதிப்பீட்டை புதுப்பித்தார். அப்போதைய திட்ட மதிப்பீடு 641/2 இலட்ச ரூபாய். ஆனால் அணை கட்டிமுடிக்கப் படும்போது 87 இலட்சம் ரூபாய் செலவானது குறிப்பிடத் தக்கது.

1884-ஆம் ஆண்டு ஆங்கில அரசு திட்டத்திற்கு அனுமதி அளித்தது. 1888-இல் அணையின் கட்டுமானம் துவக்கப்பட்டது. அணை கட்டப்படும் இடம் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த மலை மற்றும் வனம். போக்குவரத்துவசதி துளியும் கிடையாது. கட்டுமானப் பொருட்களை பெரியாறு நதிக்கரைக்கு கொண்டுவர எவ்வித சாலைவசதியும் இல்லை. 100 கிலோ மீட்டருக்கு அப்பால் ரயில்வே பாதை இருந்ததால் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வருவது பெரும் பிரச்சனை. இரண்டாவது பெரிய சவால் பருவநிலை. சுகாதாரமற்ற சூழலில் தங்கி வேலைசெய்ய மிக கடினம்.  அடுத்து பெரும் சவாலானது மலேரியா. பணியாளர்களுக்கு பரவிய மலேரியா காய்ச்சலால் 483 தமிழர்கள் இறந்து போனார்கள். அவர்களது உடல்கள் அங்கேயே புதைக்கப் பட்டது. (ஆதாரம்: (ARôWm: The Military Engineer in India, Vol III. Chatham: The Institution of Royal Engineers/ Page 28-29)  அணை கட்டுமான பணியை கவனிக்க மெட்ராஸ் பட்டாலியன் 1 மற்றும் 4 பிரிவு பட்டாலியன்கள் பயன் படுத்தப்பட்டனர். 

அணையின் அடிப்பகுதியை கட்டுவதற்கு வசதியாக தடுப்பணைகள் போர்ச்சுகீசிய கைவினைஞர்களை கொண்டு கட்டப்பட்டது. மழைக் காலங்களில் வரும் ஆற்று வெள்ளத்தை வழிந்தோட செய்தனர். அணைக் கட்டுமானப் பணிகளுக்கு இடையே அடிக்கடி தடுப்பணைகள் உடைந்து போனதால் இடையில் கட்டுமான பணி நிறுத்தப் பட்டது. மெட்ராஸ் மாகாண செயலர் பென்னிகுயிக்கை கடிந்து கொண்டார். காரணம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மதிப்பீட்டின் அளவைவிட செலவு அதிகமானது. மீண்டும் இங்கிலாந்தின் ஒப்புதல் பெற காலதாமதம் ஆனது. அணை கட்டுமான பணி இடையில் நிற்க கூடாதெனவும் தனது இலட்சியமான பெரியாறு அணையை கட்டியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தினால் பென்னிகுயிக் இங்கிலாந்தில் உள்ள தனது சொத்து, தன் மனைவியின் நகைகளை விற்றும் அணையை வெற்றிகரமாக (1888-97)கட்டி முடித்தார். பென்னிகுயிக் என்ற சிறந்த மனிதர் மட்டும் இல்லாமல் இருந்தால் பெரியாறு அணை கட்டப்பட்டிருக்காது. இதற்காகவே பென்னிகுயிக் தியாகத்தை மதிக்கும் விதமாக தமிழக அரசு அவரது உருவசிலையை நிறுவியுள்ளது. மேலும் அவரது பேரனை அழைத்துவந்து மதுரையில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.


முல்லை பெரியாறு அணையின் கட்டுமானம்

முல்லை பெரியாறு அணை ஒரு புவிஈர்ப்பு அணை (Gravity Dam). அதாவது தன்னுடைய முழு எடை மூலம் அனைத்து விசைகளையும் (நீரின்) தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டது. அணையின் மொத்த எடை புவியின் மீது அமர்ந்திருப்பதால் நீரின் அழுத்தம், அலை களால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வினால் ஏற்படும் விசை போன்றவற்றை தன்னுடைய சுய பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது. அணையானது சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும். சுர்க்கி (Surkhi) கலவை என்பது, தமிழகத்தில் காரை என அழைக்கப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பானது கால்சியம் ஆக்சைடாகும். இதனுடன் நீர் சேர்க்கும் போது நீருடன் வினைபட்டு கால்சியம் ஹைட்ராக்ஸைடை கொடுக்கும் வினை வெப்ப உமிழ்பினையாகும். இவ்வாறு கால்சியம் ஆக்சைடுடன் நீர் மற்றும் சர்க்கரை, மணல் ஆகியவற்றை சேர்த்து பெரிய ஆட்டுக்கல்லில் (உரல்) அரைக்கும் போது, சுண்ணாம்பிலிருந்து வெளியிடப்படும் வெப்பத்தினால் சர்க்கரை உருகி, செங்கல் பொடியுடன் இணைந்து ஒரு உறுதியான பிணைப்பை ஏற்படுத்த வல்லது. இது 19-ஆம் நூற்றாண்டின் கட்டுமான தொழில்நுட்பம் ஆகும். மேலும் சிமெண்ட் தயாரிப்பில் கால்சியம் ஆக்ஸைடு ஒரு முக்கிய பகுதிப் பொருள். எனவே அன்றைய ஆங்கில பொறியாளர்கள் சிறந்த கட்டுமானத்துடன் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தனர்.

  பிரச்சனையின் ஆரம்பம்

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு விடுதலை அடைந்தது. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956- இன்படி, திருவிதாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு 1956 நவம்பர் ஒன்றில் கேரள மாநிலம் உருவானது. அதேபோல தமிழ்நாடு தனி மாநிலமாகியது. நாடு விடுதலை அடைந்தவுடன் தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பெருபான்மையான தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு, மூணாறு உள்ளிட்ட பகுதிகள் கேரளாவுக்கு விட்டு கொடுக்கப்பட்டது. இந்த வரலாற்று தவறினால், முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில் இணைந்திருக்க வேண்டியது கேரள மாநிலத்துடன் சென்றுவிட்டது. அதாவது தமிழக எல்லையில் இருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை கேட்டு பெறாமல் ஏமாற்றப் பட்டோம். இது தமிழக காங்கிரஸ் கட்சி செய்த மாபெரும் குற்றம்.

தனித்தனி மாநிலங்கள் உருவானதும், சுதந்திரம் அடைந்தவுடன் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட அனைத்து ஒப்பந்தங்களும் செல்லாதவையானதால் முல்லை பெரியாறு நதிநீர் ஒப்பந்தம் புதுப்பிக்கபட வேண்டும் என்று வாதிட்டது கேரளா. அதை கூறியது பெரிய கம்யூனிஸ்ட் தலைவராக கூறப்படும் இ.எம்.எஸ். நம்புரிபாட்டுதான்.


பல கட்டங்களின் முறையே 1958, 1960 மற்றும் 1969 நடந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. நன்றாக கவனி யுங்கள் 1882-இல் திருவிதாங்கூர் மகாராஜா எப்படி ஒப்பந்தத்தை பல ஆண்டுகளாக இழுத்தடித்தாரோ அப்படியே செய்தனர் அன்றைய கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் அரசு. இருந்தபோதிலும் கேரள அரசு முன்னாள் முதல்வர் சி.அச்சுதமேனன் 1970 மே 29-ஆம் தேதி ஒப்பந்தத்தை புதுப்பித்தார். அதன்படி நிலம் ஒரு ஏக்கருக்கு ரூ.30-ம், கீழ்பெரியாரில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு கிலோவாட் 1 வருடத்திற்கு ரூ.12 என ஒப்புக் கொள்ளப் பட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. நில வாடகை ரூ. 2.5  இலட்சம், மின்சாரத்திற்கு ரூ. 7.5 இலட்சமுமாக ரூபாய் 10 இலட்சம் கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து தமிழ்நாடு கேரளாவிற்கு செலுத்தி வருகிறது.
இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வாடகை தொகை மட்டுமே மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் குத்தகை வருடம் அதே 999 தான். இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர் காலத்தில் ஒப்பந்தத்தில் உபயோகப் படுத்தப்பட்ட வார்த்தையான கப்பம் என்ற வார்த்தைதான் உபயோகிக்கப்பட்டுள்ளது. 

 பிரச்சனையின் மற்றொரு ஆரம்பம் 1979-ஆம் ஆண்டு உருவானது. 1979-ஆம் ஆண்டு மத்திய நீர் ஆணையத்தின் (Centeral Water Commission) பரிந்துரைப்படி சில பராமரிப்பு பணிகள் செய்வதற்காக அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் பூர்த்தியானவுடன் அணையின் நீர்மட்டம் 142 அடிக்கும் பின் 152 அடியாகவும் உயர்த்துமாறு அறிவுறுத்தியது மத்திய நீர் ஆணையம். இதனை அணை யின் உறுதித்தன்மையை காரணம் காட்டி கேரளா எதிர்த்தது. வழக்கு தொடுக்கவும் செய்தது. 

அணையின் ஆயுள் 50 வருடம் மட்டுமே எனவும்,  அணை பழமையான வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் தொழில்நுட்பம் ஆகியவை அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன எனவும் கூறி வாதிட்டது.  ஆனால் அதே சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கலவையால் கட்டப்பட்ட பேபி அணையை மத்திய மண் ஆராய்ச்சி கழகம் (CSMRS)  பரிசோதித்து கேரளாவின் வாதத்தை பொய்யாக்கியது.

கேரளா அரசு 1961 மற்றும் 1972 ஆகிய இருவேறு காலகட்டங்களில் கேரளா வனசட்டம் 1961 மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ஆகிய சட்டங்களை கொண்டு வந்தது. முல்லைப்  பெரியாறு நீர்த்தேக்கத்தினை சுற்றியுள்ள 777 சதுர கி.மீ பரப்பு வனவிலங்கு சரணாலயம் எனவும், நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தினால் அங்குள்ள வனவிலங்குகள், பறவைகள் மற்றும் உயிரிகள், தாவரங்கள் போன்றவற்றை கடுமையாக பாதிப்பதுடன் அதன் கரையோரங்களில் வாழும் ஜந்துக்கள் மற்றும் பறவைகளின் கூடுகள் நீரில் மூழ்கி சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று மீண்டும் கூக்குரலிட்டது. நீர்மட்டம் 132 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தும்போது 11.2 சதுர கி.மீ. மட்டுமே நீர்ப் பரப்பிற்குள்ளே செல்லும். மேலும் இது மொத்த நீர்ப்பரப்பில் மூழ்கியுள்ள பரப்பில் 1.44% தான் என்ற உண்மை மீண்டும் கேரளத்தின் வாதத்தினை தவிடு பொடியாக்கியது. 

இறுதியாக, முல்லை பெரியாறு அணையில் கண்ணுக்கு புலப்படும் விரிசல் ஏதுமில்லை எனவும், நீர்கசிவினை அளவிடும் போது அணையின் நீர்த்தேக்க பகுதியில் எவ்வித விரிசல் இல்லை எனக்கூறி 27.02.2006 அன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான நீதிபதி குழு முல்லை பெரியாறு நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்தலாம் என தீர்ப்பு கூறியது. (Mullaperiyar Environment Protection Forum vs Union of India)

அணையின் பாதுகாப்பு


கேரளா அரசு கூறுவது: புவிஈர்ப்பினை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்ட அணை 116 வருட பழமையான  சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கொண்டு கட்டப்பட்ட அணை. முல்லை பெரியாறு அணையின் சுற்றுவட்டப் பகுதியில் நில நடுக்கம் ஏற்படுகிறது. இதனால் அணைக்கு பாது காப்பில்லை. அணை உடைந்தால் கேரளத்தின் நான்கு மாவட்டம் அரபிக்கடலுக்கு அடித்து சென்றுவிடும். 30 லட்சம் மக்கள் அழிவதற்கான அபாயம் நிலவுகிறது. பழைய காலத் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்ட அணை. தற்காலத்திற்கு உதவாது. தமிழகத்திற்கு தண்ணீர்  தருகிறோம். கேரளத்திற்கு பாதுகாப்பு வேண்டும். இன்னும் ஏராளமான காரணங்களை அடுக்கி புதிய அணைகட்ட வேண்டும் என்ற வாதத்தை வைக்கிறது.

இவையெல்லாம் முல்லைப் பெரியாறு அணையைவிடவும் பழமையான அணை ஜெய்சமந்த (1730-இல் கட்டப்பட்டது)நல்ல நிலையில் இயங்கி வருகிறது. எனவே பழமையானது என்ற வாதமும் போலியாகிறது.

புவிஈர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் அணைகளில் அதன் எடைதான் அணையினை நிலைநிறுத்த கூடிய காரணி. அணையின் மொத்த எடையினால் அணையின் புவிஈர்ப்பு மையம் வழியே கீழ்நோக்கி செயல்படும். நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் மொத்த விசையானது இவ்விசைக்கு ஒருபோதும் மிகாமல் இருக்கும் வகையிலேயே அணைகள் வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கான்கிரீட் மற்றும் கற்கள் கொண்டு கட்டப்பட்ட அணைகளுக்கு தன்நிலை 24KN/M3   முல்லைப் பெரியாறு அணையின்  1,41,000M3  கன அளவு கான்கிரீட் மற்றும் கற்கள் கலந்து உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே அணையின் எடை 1,41,000 x 24 = 3243000KN (Kilo newtons)   அதாவது நீரினால் அணையில் ஏற்படும் அழுத்தம் மற்றும் அலைகளால் அணையின் எடையினால் ஏற்படும் விசையைவிட அதிகமானாலே அணை உடையக் கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இது சாத்தியமில்லை. நீரின் அழுத்தம் அணையின் கனமான அடிப்பகுதியில் (42.2மீ) அதிகமாகவும் மேலே வர வர குறையவும் செய்யும். நில நடுக்கம் ஏற்படும் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை மூன்றாவது மண்டலத்தில் (Risk Zone3) உள்ளது. இத்தகைய குறைந்த நிலநடுக்கம் சாதாரணமாக உணரப்படுவதில்லை. மேலும் அணைக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாது என்பது நிபுணர்கள் கருத்தாக இருக்கிறது.(Understanding Earthquake Disasters by Amita Sinvhal)
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தின் நான்கு மாநிலங்களும் அரபிக்கடலுக்கு அடித்து சென்று விடும் என்பது உண்மையை மறைக்கும் செயல். முல்லைப் பெரியாறிலிருந்து நீர் வெளியேறினால் அது இடுக்கி அணையை வந்தடைய 4 மணிநேரம் ஆகும். மேலும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் வெள்ள அபாயம் ஏற்படாது. இடுக்கி அணை உடைந்தால்தான் கேரளாவின் நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லும் என்னும் உண்மையை மறைந்து விஷமப்பிரச்சாரம் செய்கின்றனர்.

இடுக்கி அணையின் கொள்ளளவு 70.5 டி.எம்.சி அடி. ஆனால் இதுவரை அதன் கொள்ளளவு 57.365 டி.எம்.சி அடி வரையே நிரம்பியுள்ளது அதுவும் மழை காலத்தில். அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 11 டி.எம்.சி. நீர்தேவை. எனவே முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய தேக்க கொள்ளளவு 10 டி.எம்.சி அடியை தாங்கும் திறன் இடுக்கி அணைக்கு உள்ளது என்ற உண்மையை கேரளா அரசு மறைத்து வருகிறது.

மேலும் கடந்த 5 வருடங்களில் கேரளத்தில் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்போது அதிகமான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய கடந்த ஆட்சியில் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் மின்திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சி மேற்கொண்டது கேரள அரசு. அப்போதைய மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் அனுமதி தர மறுத்துவிட்டார். இடுக்கி அணையிலும் தற்போது மின் உற்பத்தியை கட்ட இயலாத நிலை. எனவே கேரளா தனது மின் உற்பத்தியை கூட்ட நினைக்கிறது. அதற்கு முல்லைப் பெரியாறு நீரை இடுக்கி  அணைக்கு கொண்டு சென்றால் தன் எண்ணம் சாத்தியமாகும் என்று சிந்திக்கிறது.

முக்கியமாக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு என்ற பெயரில் புதிய அணையை கட்டுவது அதன் மூலம் ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயல்வது ஆகியவை கேரளாவின் நோக்கம். ஒப்பந்தத்தை புதுப்பிக்கும்போது அணையின் கட்டுப்பாடும், இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்வது மற்றும் புதிய ஒப்பந்தத்தின் மூலம் வாடகையை உயர்த்துவது ஆகியவை கேரளாவின் மறைமுக நோக்கங்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் தரத்தயார் என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் கட்டுப்பாடு மற்றும் இயக்கம் தங்கள் கைகளில் இருக்கும் என்பதை கடந்த முன்னாள் அமைச்சர் என்.கே.பிரேமச் சந்திரன் வெளிச்சம் போட்டுக் காட்டியதை வெளியில் கூறாமல் மறைக்கின்றனர். அதேநேரம் இப்போது உள்ள அணையை உடைத்துவிட்டால் எப்போதும் அங்கு அணை கட்டமுடியாது. பொருளாதாரம், சுற்றுச்சூழலை காரணம் காட்டி புது அணையை கேரளா அரசு நிச்சயம் கட்டாது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீரும் கிடைக்காது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இருமாநில அரசுகளும் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டிய பிரச்சனை. அதைவிடுத்து தங்களின் அரசியல் அதிகாரத்திற்கு அப்பாவி மக்களை (தமிழர்களும் மலையாளிகளும்) தூண்டிவிட்டு மோதவிடுவது அரசியல் வாதிகளின் கீழ்தரமான செயல். அதனை மார்க்சியம் பேசும் கட்சியே செய்வது மக்கள் விரோத செயல். 

பண்டைய காலத்தில் மனிதர்கள் வாழ தகுதியற்ற, அடர்ந்த காடாக விளங்கிய முல்லைப் பெரியாரின் முன்பகுதிகள் தற்போது 30,000 பேர் வசிப்பதாக கூறுவது யார் தவறு? எவ்வாறு பாதுகாப்பற்ற அணையின் முன்பகுதியில் மக்களை குடியேற அரசு அனுமதித்தது? கேரள அரசு அதிகாரிகளின் கணக்குப்படி 450 குடும்பங் களே அங்கு வசிக்கும்போது ஏன் 30,000 பேர் என திரித்து கூறுகிறது. கேரளாவின் அனைத்து ஊடகங்களும் அணையின் உண்மையான கட்டமைப்பை பற்றி மூச்சுவிட மறுக்கின்றன. தமிழகத்திலும் சில பத்திரிகைகள் தொடர்ந்து தமிழர் விரோத போக்குடனே எழுதிவருகின்றன. அவற்றை தமிழர்கள் அறிவார்கள். கேரள அரசு மனித மனங்களில் நீர்பிரளய பீதியை கிளப்புகிறது. தமிழக அரசு மேற்கொண்ட பராமரிப்பு பணிகளை சற்று விரிவாக தெரிந்து கொண்டாலே கேரள மக்களின் பீதி நீங்கிவிடும்.

தமிழகம் 1980 முதல் 1994 வரை அணையை வலுப் படுத்தும் பணி மேற்கொண்டது. இதன் மூலம் அணையின் எடை 12 டன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அணையின் முன்பகுதியில் 3 அடி பருமன்கொண்ட ஆர்.சி.சி கட்டுமானப் பணி அணை முழுவதும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நில அதிர்வுகளை தாங்கிக் கொள்ள அணையின் அடித்தள பாறையில் 30 அடி வரை, 9 அடி இடைவெளியில் அணையின் முழு நீளத்திற்கும் 95 எஃகு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு கம்பியும் 7 மி.மீ ஷ் 34 எஃகு கம்பிகள் கொண்டதாகும்.

 நீர் கசிவை காரணம் காட்டும் கேரள அரசு, அணை பாதுகாப்பாக, வலுவாக இருக்க இதுபோன்று புவிஈர்ப்பு அணையில் சிறிதளவு நீர் கசிவதும் அணை வெளியேற்ற நீர்கசிவு வடிகால் இருக்கவேண்டும் என்பதனை ஏற்க மறுக்கிறது. நீர் கசிவதனால் அணையமைப்பின் மீது நீர் உருவாக்கும் மேல் நோக்கிய தூக்கு விசை குறைகிறது. எனவே ஓரளவு நீர் கசிவது அவசியம் என்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்சிகளின் துரோகம்

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நீர்ப்பாசனம் மாநிலப் பட்டியலில் 17-ஆம் விதியில் உள்ளது. இருப்பினும் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 56-ஆம் இனத்தின்படி மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகள் தொடர்பாக சட்டமியற்றி மேலாண்மை செய்வதற்கு மத்திய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பட்டியலில் உள்ள 20-ஆம் இனத்தில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கும் மத்திய அரசிற்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்களைப் பிரச்சினைகளைக் கையாள்வதற்குச் சட்ட விதிகள் உள்ளன. மேலும் 1956-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  மாநிலங்களுக்கு இடையேயான ஆற்றுநீர் சச்சரவுத் தீர்வுச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக மாநிலங்களுக்கு இடையே ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதற்கும், சிக்கல் ஏற்பட்டால் உரிய முறையில் தீர்வு காண்பதற்கும் வழி காணப்பட்டுள்ளது. 1956-ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் அமைந்த பிறகு, எல்லைகளை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையே மண்டலக் குழுக்களை (Zonal Councils)  உருவாக்கித் தீர்வு காண்பதற்கும் சட்டத்தின் வழியாக வகை செய்யப் பட்டுள்ளது. 

மேலும் அரசமைப்புச் சட்ட விதிகள் 263-ஆம் பிரிவின்படி மாநிலங்கள் மன்றத்தைக் குடியரசுத் தலைவர் விரும்புகிற எந்த நேரத்திலும் கூட்டலாம்; பொதுநலம் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இச்சட்டப்பிரிவின் அ-ஆ-இ (A-B-C)  பிரிவுகள் மாநிலங்களுக்கு இடையே தோன்றும் சிக்கல்களை ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்கி அப் பரிந்துரையின் அடிப்படையில் கொள்கைகளையும் நடை முறைத் திட்டங் களையும் ஒருங்கிணைந்த முறையில் நடைமுறைப்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகின்றன. மேற்கூறிய சட்டப் பிரிவுகள் கூட்டாட்சி இயலின் கூறுகளைத் தெளிவுற விளக்குகின்றன. மாநிலங்களுக்கிடையேயான ஆற்றுநீர்ச் சிக்கல்கள் அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளைக் கிளறக் கூடியவை என்கிற காரணத்தினால்தான் மேற்கூறிய சட்டப்பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன. இருப்பினும், மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பேற்ற, தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரசுக் கட்சியும், பா.ஜ.க.வும் தங்களின் மாநில செல்வாக்கைத் தேர்தல் கண்ணோட்டத் தோடு அணுகி ஒரு நிரந்தரமான தீர்வை அடைவதற்கு எவ்வித ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.    

மாறாக மாநிலங்களுக்கிடையே பகைமை உருவாக இந்த கட்சிகளே காரணமாகவும் உள்ளன. இதில் இடதுசாரி களுக்கும் மக்கள் நலனைவிட கட்சி, ஓட்டு, ஆட்சி அதிகாரம் ஆகியவை முக்கியம்.

1989-இல் வி.பி.சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தார். இந்த நடவடிக்கை வழியாகத் தான் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் நதிநீர் பங்கீட்டின் அளவை எட்ட முடிந்தது. ஆயினும், மத்திய அரசு துணிவான, உறுதி யான நடவடிக்கையை  மேற்கொள்ளாத காரணத்தினால் இச்சிக்கல்கள் இன்றும் தொடர்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங் களுக்கு இடையே நதிநீர்க் பங்கீடு, அணை கட்டுதல் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகின்றன.

மத்திய- மாநில உறவுகளை ஆய்வு செய்த நீதிபதி சர்க்காரியா குழு இச்சிக்கல்களைத் தீர்வு காணும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான ஆற்றுநீர் சட்டத்தில்(Inter- State Water Disputes Act) மாற்றம் செய்வதற்கு சில ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைச் செய்தது. இதற்கான சட்டத்திருத்தங்கள் 2002-இல் மேற்கொள்ளப்பட்டாலும் இதுவரை ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இதே நிலையில்தான் முல்லைப் பெரியார் அணைக்கட்டுப் பிரச்சினையிலும் மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை மேற்கொள்ளவில்லை.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளைக் கேரள மாநில அரசு தொடர்ந்து புறந்தள்ளி வருகின்றது. நதிநீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அரசமைப்புச் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு, ஒரு அமைதியான தீர்வினைக் காண்பதற்கு முயன்று வருகிறது. தேசியக் கட்சிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு கேரளத்தில் மாறி மாறி ஆட்சி செய்யும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதிக்கவில்லை. அரசமைப்புச் சட்ட விதிகளை மீறுகின்ற நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொள்கின்றன. அளவிற்கு மீறிய அதிகாரங்களைக் குவித்துக் கொண்டுள்ள மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையேயான ஆற்றுநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறது. இவையெல்லாம் தேசிய இனப் பிரச்சினையையே உருவாக்கும்.