Tuesday, January 10, 2012

ஹைட்ரஜனில் ஓடும் ஆட்டோ அறிமுகம்




புது தில்லி, ஜன.9: உலகிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ஆட்டோக்கள் தில்லி கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹைஆல்ஃபா என்ற பெயரிலான இந்த ஆட்டோக்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன
.
 ஹைட்ரஜனில் இயங்கும் இத்தகைய ஆட்டோக்கள் செயல் விளக்கமாக பிரகதி மைதானத்தில் வலம் வந்தன. இதற்காக ஹைட்ரஜன் நிரப்பு நிலையமும் கண்காட்சி அரங்கில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐடிபிஓ) இந்த ஆட்டோக்களை சோதனை ரீதியில் மைதானத்தில் பயன்படுத்தி வருகிறது
.
 ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (யுனிடோ) மற்றும் சர்வதேச ஹைட்ரஜன் சக்ஜி தொழில்நுட்ப மையம் (ஐசிஹெச்இடி), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் தில்லி ஐஐடி ஆகியன கூட்டாக இந்த ஆட்டோவை தயாரித்துள்ளன. இதற்கு மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சகம் ஒத்துழைப்பு அளித்துள்ளது.கரியமில வாயுவை வெளியேற்றாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் முதல் கட்டமாக இத்தகைய ஆட்டோக்கள் உருவாக்கப்பட்டதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார்.
 வர்த்தக ரீதியில் இத்தகைய வாகனங்கள் இன்னமும் உற்பத்தி செய்யப்படவில்லை. சோதனை ஓட்டத்தின்போது ஏற்படும் குறைகள் சரி செய்யப்படும். மேலும் ஒரு கிலோ ஹைட்ரஜன் விலை ரூ. 250 ஆக உள்ள நிலையில் இது கட்டுபடியாகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஹைட்ரஜன் விலை குறைந்தால் இத்தகைய ஆட்டோக்களை தயாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற அவர், ஏற்கெனவே சிஎன்ஜி-யில் இயங்கும் ஆட்டோக்களை விட இதன் விலை ரூ. 20 ஆயிரம் கூடுதலாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். சிஎன்ஜி ஆட்டோக்களின் விலை ரூ. 2 லட்சமாகும். 20 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு இப்போது ஹைட்ரஜனில் இயங்கும் ஆட்டோ சாத்தியமாகியுள்ளதாக ஐஐடி தில்லி பேராசிரியர் எல்.எம். தாஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment