Monday, December 12, 2011

பருவநிலை மாற்றம்: 2015-க்குள் ஒப்பந்தம்

 பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை 2015-க்குள் மேற்கொள்ள டர்பனில் நடைபெற்ற மாநாட்டில் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் 2020-லிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது நடைமுறையில் உள்ளது "கியோட்டோ ஒப்பந்தம்'. 2008-ல் இருந்து 2012-க்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்கு குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப்பட்டது. இந்த அளவானது 1990-க்கும் முன்பிருந்த நிலையாகும். இதன்படி "பசுமை இல்ல வாயுவை' (கார்பன் டை ஆக்ûஸடு) அதிகம் வெளியிடும் நாடுகள் இந்த அளவை எட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


 புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 194 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமையே முடிய வேண்டிய இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு காரணமாக 36 மணி நேரம் தாமதமாக முடிவுற்றது.
 இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளே, பசுமை இல்ல வாயுவை அதிகளவு வெளியிடுவதாகவும், இந்நாடுகள்தான் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்து. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவும். சீனாவும், புதிய கட்டுப்பாடுகளினால் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்க நேரிடும் என்றன.


 இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஐரோப்பிய யூனியன் தெரிவிக்கும் திட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் என்ன என்பது தெரியாமலே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை எங்கள் நாட்டினால் பணயம் வைக்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் தங்களைப் பிணையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைவருக்கும் சமமானதே என்றும் அவர் தெரிவித்தார். தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட, வளரும் நாடுகளின் பொறுப்புணர்ச்சி இவ்விஷயத்தில் குறைவு என்ற வாதத்தையும் அவர் நிராகரித்தார். சனிக்கிழமை இரவு வரை இந்த விவாதம் நீடித்ததால், மாநாட்டின் தலைவரும், தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மெய்டே நொகானா-மஷாபேன் 10 நிமிட இடைவேளையை அறிவித்தார்.


 இந்த இடைவேளையில் ஐரோப்பிய யூனியனின் ஆணையர் கோனி ஹெடிகார்டு மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஓர் சமரச முடிவை எட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சு நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பினரும் 2015-க்குள் ஓர் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர். மேலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கென ஏழை நாடுகளுக்கு நிதியளிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவரை கியோட்டோ ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது.


 இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பிரதிநிதிகளின் தலைவர் ஸி ùஸன்ஹுவா,
 அமையவுள்ள ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் விதிகளின்படியே அமையும் என்று தெரிவித்தார்.


 இந்தியாவின் கருத்துகள் குறித்துத் தெரிவித்த ஐரோப்பிய யூனியன் ஆணையர் ஹெடிகார்டு, தனது பொருளாதாரத்துக்கு ஆபத்தான முடிவை எடுக்கும்படி இந்தியாவைத் தாங்கள் வலியுறுத்தவில்லை என்றும், அந்நாட்டின் வளர்ச்சியை முழுமையாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.
 அதே சமயம் ஒப்பந்தம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment