Monday, December 12, 2011

கொல்கத்தாவில் உள்ள 7 மாடி தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து : 40 பேர் கருகி பலி..

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் 7 மாடி கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் கருகி பலியாயினர். முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்ட கட்டிடம் என்பதால் மளமளவென பரவும் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். கொல்கத்தாவின் டாகுரியா பகுதியில் ‘அம்ரி ஹாஸ்பிடல்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. மேற்கு வங்கத்தில் பிரபலமான இமாமி மற்றும் சாச்சி தொழில்நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவான மருத்துவமனை இது. இந்த மருத்துவமனையில் பிரதான கட்டிடமும் அதையொட்டி 7 மாடி அனெக்ஸ் கட்டிடமும் உள்ளது. 7 மாடி அனெக்ஸ் கட்டிடம் முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்டது. இங்கு ஐசியூ, ஐசிசியூ, ஐடியூ மற்றும் கிரிடிக்கல் கேர் யூனிட் என உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவுகள் உள்ளன. 

இந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் சென்ட்ரலைஸ்டு ஏசி மெஷின்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இன்று அதிகாலை இந்த தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. சம்பவம் நடந்த போது ஏசி கட்டுப்பாட்டு அறையில் யாரும் இல்லாத காரணத்தால் தீப்பிடித்தது பற்றி ஊழியர்களுக்கு உடனடியாக தெரியவில்லை. கீழ் தளத்தில் பிடித்த தீ, முதல் தளத்துக்கு பரவிய பிறகுதான் ஊழியர்கள் உஷாரானார்கள். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் 250 வீரர்கள் விரைந்தனர். போலீஸ் கமிஷனர் ஆர்.கே.பச்நந்தா தலைமையில் போலீஸ் படையும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு பணியை முடுக்கி விட்டனர். 

அதற்குள் கட்டிடத்தின் 3 தளங்களில் தீ பரவி விட்டது. 7 தளங்களிலும் கரும்புகை சூழ்ந்தது. முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்ட கட்டிடம் என்பதால் ஜன்னல், கதவு என எல்லா இடங்களிலும் வழிகள் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் மருத்துவமனையில் சிக்கிய நோயாளிகள் உடனடியாக வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு நோயாளியாக வெளியே கொண்டு வந்தனர். தீயில் 60க்கும் அதிகமான நோயாளிகள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து உறுதியான தகவல் இல்லை. மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நோயாளிகளுக்கு அந்த மருத்துவமனையிலேயே டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். பலர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டிடத்தின் 3வது தளம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பிர்ஹத் ஹக்கீம், தீயணைப்பு துறை அமைச்சர் ஜாவத் கான் ஆகியோரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். கட்டிடத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் எளிதாக எல்லா தளங்களுக்கும் தீ பரவியதாக அமைச்சர் ஜாவத்கான் தெரிவித்தார். இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தீ முழுமையாக அணைக்கப்பட்டு அனைத்து தளங்களையும் தீயணைப்பு வீரர்கள் பரிசோதித்த பின்னரே இறப்பு குறித்த முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். நோயாளிகள் மட்டுமின்றி டாக்டர்கள், ஊழியர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். தீ பிடித்த கட்டிடத்தில் இருந்த நோயாளிகள் நிலை குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனையில் ஒருவரும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்து அவர்கள் மருத்துவமனையின் ரிசப்ஷன் பகுதியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

No comments:

Post a Comment