தமிழகத்தில் 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 710 ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட உயர்நிலைப் பள்ளிகளாக 2011-12ம் ஆண்டில் தரம் உயர்த்தவும், இந்த உயர்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 பட்டதாரி ஆசிரியர் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், தலா 1 ஆய்வக உதவியாளர் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடம், தலா 1 இளநிலை உதவியாளர் வீதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆண்டுக்கு ரூ.113 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 600 செலவு ஏற்படும். இவ்வாறு தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்த செலவினங்களுக்காக தலா ரூ.58.12 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு ரூ.412 கோடியே 65 லட்சம் ஒப்புதல் அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் 2009ம் ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 19 லட்சம் கூடுதல் செலவாகும். அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் தொடக்க கல்வி துறையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பணிபுரிய 1581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலை பள்ளி, மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூ.75 கோடியே 40 லட்சம் செலவு ஏற்படும். இதேபோல் 6 முதல் 8ம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58 கோடியே 82 லட்சம் செலவாகும். மேலும் அனைவருக் கும் கல்வி திட்டத்தின் கீழ் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக 2011-12 கல்வியாண்டில் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பணியிடம் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 63 ஆயிரம் செலவு ஏற்படும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDelete