Friday, November 25, 2011

சென்னை ஐகோர்ட்டுக்கு வயது 150 !

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை : இந்தியாவின் முதல் சுப்ரீம் கோர்ட் சென்னையில்தான் முதன்முதலில் அமைக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தற்போதுள்ள சென்னை ஐகோர்ட்தான் சுப்ரீம் கோர்ட்டாக செயல்பட்டு வந்தது. அதற்கு வானளாவிய அதிகாரமும் இருந்தது.  சென்னை ஐகோர்ட் உருவானதில் பல சுவையான தகவல்கள் உள்ளன. சென்னையில் கி.பி. 1600 முதல் 1800 வரை பல்வேறு பெயர்களில் கோர்ட்கள் செயல்பட்டு வந்தன. இங்கிலாந்து அரசர் 1-ம் ஜேம்ஸ், புதிய கோர்ட் அமைப்பதற்கான உத்தரவை 1609 மே 31-ம் தேதி அறிவித்தார்.  ‘ராயல் சார்ட்டர்’ என்ற பெயரில் செயல்பட்ட இந்த கோர்ட், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியினரால் நடத்தப்பட்டது. குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு இருந்தது. பின்னர் கடற்கரை பகுதியில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கிழக்கிந்திய கம்பெனியினர் உருவாக்கினர். அப்போது, ‘சத்திரம்’ என்ற பெயரில்தான் கோர்ட் இயங்கியது. இதில் சிறிய குற்றங்களுக்கான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்தன. 
சென்னை மாகாண கவர்னர் சத்திரம் அல்லது டவுன் ஹாலில்தான் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. வழக்குகளை விசாரிப்பவர் ‘கண்ணப்பர்’ என்று அழைக்கப்பட்டார். பிரச்னைக்குரிய, குழப்பமான வழக்குகளை, குறிப்பாக ஆங்கில மொழியில் உள்ள வழக்குகளை கண்ணப்பர் விசாரிக்க மாட்டார். அந்த வழக்குகள் இங்கிலாந்தில் உள்ள கோர்ட்களுக்கு மாற்றப்பட்டன.
1802-ல் ஜில்லா கோர்ட்கள் (மாவட்ட கோர்ட்) அமைக்கப்பட்டன. இதில் மாவட்ட அளவிலான சிவில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. ஜில்லா கோர்ட்களின் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக 1842-ல் புரவின்ஷியல் (மாநில அளவிலான) கோர்ட்கள் அமைக்கப்பட்டன. 1843-ல் தலைமை குற்றவியல் கோர்ட் உருவாக்கப்பட்டது. 1861-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி, வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம், அந்நாட்டு அரசரின் நேரடி ஏஜென்டான கவர்னருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, எல்லா வழக்குகளும் சென்னையிலேயே விசாரிக்கப்பட்டன.

அதே 1861-ல் இந்தியாவில் ஐகோர்ட்களை அமைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி கொல்கல்தா, சென்னை, மும்பை ஆகிய 3 இடங்களில் ஐகோர்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் செயல்பட்டு வந்த சுப்ரீம் கோர்ட்டை ரத்து செய்யும் உத்தரவை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. சென்னை ஐகோர்ட்டை உருவாக்குவதற்கான அறிவிப்பாணையை 1862 ஜூன் 26-ல் விக்டோரியா மகாராணி பிறப்பித்தார். இரண்டு மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை ஐகோர்ட் அமைப்பதற்கான உத்தரவு செயல்படுத்தப்பட்டது. இடவசதி இல்லாததால் பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள கஸ்டம்ஸ் ஹவுஸ் கட்டிடத்தில்தான் சுப்ரீம் கோர்ட் இயங்கிவந்தது. ஐகோர்ட் அறிவிப்புக்கு பின்னர் சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு கோர்ட் மாற்றப்பட்டது. 1892 வரை கலெக்டர் அலுவலக கட்டிடத்திலேயே ஐகோர்ட் இயங்கி வந்தது. இதற்கிடையே, 1888-ல் தற்போதுள்ள ஐகோர்ட் வளாகத்தில் ஐகோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 4 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த பணி முடிவடைந்த நிலையில், 1892 ஜூலை 12-ம் தேதி புதிய கட்டிடத்துக்கு ஐகோர்ட் மாற்றப்பட்டது.

ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதியாக ராஜமன்னார் பொறுப்பேற்றார். பல வரலாற்று சிறப்பு மிக்க வழக்குகளை சென்னை ஐகோர்ட் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, அண்ணாவின் ஒரே நாடு பத்திரிகை வழக்கு, விஷ ஊசி வழக்கு போன்ற முக்கிய வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டன. வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட் தொடங்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் 149 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. 150 ஆண்டில் ஐகோர்ட் தனது பணியை தொடங்கியுள்ளது. இதையடுத்து, 150-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் விழா நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐகோர்ட்டும் வக்கீல்கள் சங்கங்களும் செய்து வருகின்றன. விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சதாசிவம், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், தமிழக அமைச்சர் பரஞ்சோதி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்கின்றனர்.   

விழா குறித்து வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்களுக்கும் முன்னோடியாக சென்னை ஐகோர்ட் செயல்பட்டு வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. நாட்டின் முதல் சுப்ரீம் கோர்ட் என்ற பெருமையை பெற்றுள்ள ஐகோர்ட்டின் 150-வது கொண்டாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்’’ என்றார். பெண் வக்கீல்கள் சங்க தலைவர் பிரசன்னா கூறும்போது, ‘‘பாரம்பரியம்மிக்க ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு விழாவை தமிழக வக்கீல்கள் கொண்டாடி வருகிறோம். இதையொட்டி ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பெண் வக்கீல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை ஐகோர்ட் தமிழகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சிறப்பு சேர்த்துள்ளது’’ என்றார்

No comments:

Post a Comment