திடீரென உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை (பீப்பாய் ஒன்றுக்கு 150 டாலருக்கு மேல்) உயர்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். இந்த விலை உயர்வை மக்களின்மீது மத்திய அரசு சுமத்த பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி விடுகிறது. இதன் விளைவாக போக்குவரத்து வாகனங்களின் கட்டணம் உயர்ந்துவிடுகிறது. இந்த உயர்வானது உணவுப்பொருட்கள், காய்கறி, பழங்கள், நுகர்வுப்பொருட்கள் என அனைத்து பொருட்கள் மற்றும் சேவை கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்து விடுகின்றது. பொருட்களின் இந்த திடீர் விளைவாசி உயர்வதால் பணவீக்கம் அதிகரிக்கிறது.
பணவீக்கம் என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், நாட்டின் நாணயத்தின் பொருட்கள் வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டு சந்தையில் குறைந்து போவதை குறிக்கிறது. ஆக, பணவீக்கம் என்பது ரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி அடைந்து அப்பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்களின் இலாபம் குறைந்துப் போகிறது. அப்போது தொழில் நிறுவனங்கள் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசை நிர்பந்திக்கிறது.
நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் போதெல்லாம் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இதனை இந்திய ரிசர்வ் வங்கி செய்கிறது. இதனால் வீட்டுக் கடன், ஆட்டோ கடன் மற்றும் இதர காரியங்களுக்காக வங்கி கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
ஆக, வட்டி விகிதத்தை உயர்த்தினால் பணப்புழக்கம் குறைந்து பணவீக்கம் குறையும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்காகும். பணவீக்கத்தின்போது உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வால் வருமானத்தின் பெரும் பகுதி நுகர்வதற்கே சென்றுவிடுவதால் சேமிப்பு குறைந்துவிடும். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்து விடுகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டுகளைவிட ஜி.டி.பி. குறைந்து வருகிறது. இப்படியான பொருளாதார பிரச்சினைகளைதான் இன்று உலக நாடுகள் சந்தித்துவருகின்றன. இப்பொருளாதார பிரச்சினையை தீர்க்க சரியான தீர்வையும் அதற்கான ஆய்வையும் நடத்தியவர்களுக்குத் தான் இந்தாண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.
தற்காலிக வட்டிவீதம் அதிகரிப்பு அல்லது வரி குறைப்பால் எவ்வாறு நாட்டின் ஜி.டி.பி. மற்றும் பணவீக்கம் பாதிப்படைகிறது? மத்திய மைய வங்கி பணவீக்கத்தை இலக்காக கொண்டு, நிரந்தர மாற்றத்தை கொண்டு வரும்போது அரசு தனது பட்ஜெட் சம நிலையை நோக்கமாக கொண்டு மாற்றத்தை கொண்டு வரும்போதும் என்ன நிகழ்கிறது? இதுதான் இந்த ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசினை தாமஸ் ஜே. சார்ஜெண்ட், கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகியோருக்கு பெற்று தந்தது. மேற்கண்ட கேள்விகளுக்கு இவர்களின் ஆராய்ச்சியில் பதில் கொடுத்துள்ளனர்.அதோடு பொருளா தாரக் கொள்கை மற்றும் மாறுபட்ட பேரியல் பொருளாதார (Macro Economics) சார்ந்த ஜி.டி.பி. பணவீக்கம், வேலைவாய்ப்பு, முதலீடு இடையே உள்ள பரஸ்பர தொடர்புகளை தெளிவுபடுத்தியுள்ளனர்.
"பொருளாதார கொள்கைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வேலை வாய்ப்பு, முதலீடுகள் போன்ற பருப்பொருளி யல் மாறிகளுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான செய்முறைகளை இவர்கள் இருவரும் உருவாக்கினார்கள்' என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு வெளி யிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கட்டமைப்பு பருப்பொருளியல் தொடர்பான முறையை சார்ஜென்ட் உருவாக்கினார். பொருளாதாரக் கொள்கை களில் ஏற்படும் நிரந்தரமான மாற்றத்தை ஆய்வு செய்வதற்கு இவரது ஆய்வு பயன் பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்களும், மக்களும் தங்களது எதிர் பார்ப்புகளை மாற்றியமைத்துக் கொள்ளும் போது பருப்பொருளியல் மாறிகளுக்கு இடையேயான தொடர்புகளை ஆய்வுச் செய்ய இவர் உருவாக்கிய முறை பயன்பட்டது என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு குறிப் பிட்டிருக்கிறது.
சிம்ஸின் முறை வேறு மாதிரியானது. பொருளாதாரக் கொள்கையில் ஏற்படும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு போன்ற தற்காலிக மாற்றங்களால் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து பொருளாதார மாதிரிகளை உருவாக்கினாலும், இரண்டும் ஒன்றையொன்று முழுமையடையச் செய்வதாக உள்ளன. இவர்களின் கண்டுபிடிப்புகளை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வகுப்பவர்களும் பின்பற்றி வருகின்றனர் என்றும் நோபல் குழு புகழாரம் சூட்டியிருக்கிறது.
No comments:
Post a Comment