ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிப்பது அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைவரும் அறிந்ததே. அறிவியல் வளர்ச்சியை அதிகப்படுத்தி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகள் எடுத்து முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. நமது முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் கனவுப்படி 2020-க்குள் இந்திய தேசம் வல்லரசாக வேண்டுமெனில் அறிவியல் வளர்ச்சி மிகவும் முக்கியம்.
இந்தியாவில் அறிவியலை வளர்த்தெடுக்கவும், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏதேனும் சரியான ஓர் இடத்தில் அறிவியல் மாநாட்டினை நடத்தி அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரை கள், பத்திரிகைகளை வெளியிட்டு அறிவியலை பிரபலப்படுத்தும் நோக்குடன் 1914-இல் துவங்கப்பட்டதுதான் இந்திய அறிவியல் கழக அமைப்பு. பிரிட்டிஷ் வேதியியலார்கள், பேராசிரியர்
ஜே. எல். சைமன்சென் மற்றும் பேராசிரியர். பி.எஸ். மேக்மஹன் அவர் களின் அரிய முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் அறிவியல் மாநாட்டினை நடத்தி, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும் அதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது. இந்த அறிவியல் மாநாடானது ஒவ்வோர் ஆண்டும் வழக்கப்படி ஜனவரி முதல் வாரத்தில் பாரத பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்படுகிறது.
முதல் இந்திய அறிவியல் மாநாடு 1914-ஆம் ஆண்டு ஜனவரி 15-17 தேதிகளில் நீதியரசர் அசுதோஷ் முகர்ஜி அவர்களின் தலைமையில் கல்கத்தாவில் நடைபெற்றது.
இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் 105 விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தாவரவியல், வேதியியல், இனவியல், புவி அமைப்பியல், இயற்பியல், விலங்கியல் என ஆறு துறைகளில் விவாதித்தனர்.
இந்திய அறிவியல் மாநாட்டின் வெள்ளிவிழா அமர்வானது 1938- இல் கல்கத்தாவில் லார்டு ரூதர்ஃபோர்டு ஆஃப் நெல்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அவருடைய எதிர்பாராத மறைவால் சர் ஜேம்ஸ் ஜுன்ஸ் தலைமையேற்றார். 34-வது அறிவியல் மாநாடானது 1947, ஜனவரி 3-8 தேதிகளில் டெல்லியில் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
1963- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டெல்லியில் பேராசிரியர். டி.எம்.எஸ். கோத்தாரி அவர்களின் தலைமையில் அறிவியல் மாநாட் டின் பொன்விழா சிறப்புடன் கொண்டாடப் பட்டது.
1973-ஆம் ஆண்டு ஜனவரி 3-9 தேதிகளில் அறிவியல் மாநாட்டினுடைய வைரவிழா டாக்டர்.எஸ். பகவந்தம் தலைமை யிலும், பவள விழாவானது 1988-இல் பேராசிரியர். சி.என். ஆர்.ராவ் அவர்கள் தலைமையிலும் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து இந்த அறிவியல் மாநாடானது ஒவ்வோர் ஆண்டும் முனைப்போடு அறிவியல் ஆராய்ச்சியை மையப்படுத்தி இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. மாணவ, மாணவிகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மாநாட்டில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டு அறிஞர்களும் பல கல்வியில் சிறந்த மேதைகளும் கலந்துகொண்டு மாநாட்டில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வது மாநாட்டுக்கு அணி சேர்க்கின்றது.
இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 98-வது இந்திய அறிவியல் மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். கே. சி.பாண்டே அவர்களின் தலைமையில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமர்த்தியா சென் உட்பட ஆறு நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள், விண்வெளித்துறை விஞ்ஞானிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் என மொத்தம் 7,500 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். "தரமான கல்வி மற்றும் இந்தியப் பல்கலைக் கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தினை மேம்படுத்துதல்' என்ற மையக் கருத்தோடு அறிவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் கருத்தரங்குகளில் சீரிய சிந்தனைக்கு வழி செய்தனர்.
ஜனவரி 3, 2011 அன்று நடந்த 98- வது இந்திய அறிவியல் மாநாட்டின் துவக்க விழாவில் பேசிய பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ""அறிவியலாளர்கள் புதுமையாக சிந்திக்க வேண்டும்'' என்று மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் ""21-ஆம் நூற்றாண்டின் ராமன்களையும், ராமானுஜன்களையும் இந்தியா உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்த சூழல் எல்லா பல்கலைகழகங்களிலும் ஏற்படுத்த வேண்டும்'' என கூறி அறிவியல் வளர்ச்சியில் பல்கலைக் கழகங்களின் முக்கியப் பங்கினை வலியுறுத்தினார். ""பொருளாதார வளர்ச்சி, மக்களின் சுகாதாரம், நாட்டின் பாதுகாப்பு ஆகியவை அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை சார்ந்தே உள்ளன. ஆகவே அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தை மேம் படுத்துவது அவசியம்'' எனவும் பிரதமர் கூறினார்.
அறிவியல் மாநாட்டில் பேசிய மற்ற அறிவிய லாளர்களும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் அறிவியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தங்களின் அரிய கருத்துகளை அறிவியல் மாநாட்டில் முன்வைத்தனர். இந்த அறிவியல் மாநாட்டில் பல இளம் விஞ்ஞானிகளும், அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவியல் மாநாட்டில் தரமான கல்வியை வழங்குவதையும், இந்திய பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சியை வளப்படுத்துவதையும் முக்கிய மாக கருதி, இதில் அரசின் பங்கையும் இம்மாநாடு வலியுறுத்தியது.
12 கோடி ரூபாய் செல வில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த அறிவியல் மாநாடு பல இளம் மாணாக்கரிடம் அறிவியல் அறிவை வளர்த்து, அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயமு மில்லை. உலகில் வல்லரசாக இந்தியா மாறவேண்டுமெனில் அறிவியல் வளர்ச்சி மிகவும் முக்கியம். 1914-இல் துவங்கப்பட்ட இந்திய அறிவியல் மாநாடு நூறாண்டை நோக்கி சிறப்புடன் அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றது. மாநாட்டில் விவாதிக்கப்பட்டதுபோல அறிவிய லாளர்கள் புதுமையாகச் சிந்தித்து பல புதிய சாதனைகளை இப்புவிதனிலே புரிந்திட வேண்டும்.
அடுத்த 99-வது இந்திய அறிவியல் மாநாடா னது 2012-ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 7 தேதிகளில் புவனேஷ்வரில் நடைபெற உள்ளது.
அதில் அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்கினை மையமாகக் கொண்டு விவாதிக்கப்படும்.
எல்லா கல்வி நிலையங்களிலும் குறிப்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அறிவியல் ஆராய்ச்சி அதிகப்படுத்தப்பட வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நம் தேசத்தின் வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மிக முக்கியம். தொடர்ந்து இந்திய அரசும் அதிக முயற்சிகள் எடுத்து அறிவியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப் படுத்தி அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அறிவியல் வளரட்டும், அகிலத்தில் அநேக வளர்ச்சி பெற்று இந்தியா ஒளிரட்டும்!